செவ்வாய், 22 ஜூலை, 2025

Privacy Policy

 Privacy Policy for marabuvazhkai.blog


At marabuvazhkai.blog, we value your privacy. This Privacy Policy explains what information we collect and how we use it.


- We do not collect any personal information without your consent.

- We may use cookies to improve user experience.

- Third-party vendors like Google may use cookies to serve ads.

- You can choose to disable cookies through your browser settings.


If you have any questions, contact us via [gomsenthil@gmail.com]


Updated: July 2025


திங்கள், 21 ஜூலை, 2025

விறகு வெட்டியும் தேவதையும்(நேர்மையின் பரிசு)

 சிறுவர்களுக்கு நல்லகதைகள் சொல்லி அவர்களை நற்குணம் மிக்கவராக உருவாக்க மரபுகளாகத் தொடரும் கதைகள்தான் சிறுவர் நீதி நெறிக் கதைகள்: சிறுவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக அவர்கள் மகிழும்படியும் ,பண்புகளைக் கற்றுக்கொள்ளும்படியும் ஏராளமான விலங்குகள், தேவதைக் கதைகள் உள்ளன.அவற்றில் 
ஒன்றுதான் விறகுவெட்டியும் தேவதையும். நேர்மையாக இருப்பதன் விளைவு என்ன என குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ள இந்தக் கதை உணர்த்தும்.

விறகு வெட்டியும் தேவதையும்

ஒரு கிராமத்தில் நேர்மையான ஒரு விறகு வெட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.அவன் தன் தினசரி பிழைப்புக்கு பக்கத்து காட்டிற்கு சென்று விறகு வெட்டி விற்று வாழ்ந்தான்.எப்போதும்போல் ஒருநாள் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டிருந்தான்.




அவனுடைய இரும்புக் கோடாரி கைநழுவி ஆற்றில் விழுந்து மூழ்கியது.அதிர்ச்சியடைந்த விறகு வெட்டி "ஐயோ கடவுளே!இந்தக் கோடாலிதான் எனது குடும்பம் பசியில்லாமல் வாழ உறுதுணையாக இருந்தது"."இனி கோடாரி இல்லாமல் என்ன செய்வேன்?" என மிகவும் வருந்தினான்.




அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி"ஏன் அழுகிறாய் விறகுவெட்டியே?"எனக் கேட்டது.அப்போது விறகு வெட்டி "எனது கோடரி கை நழுவி ஆற்றில் விழுந்து விட்டது இனி பிழைப்புக்கு என்ன செய்வேன்!"என வருந்தினான்.
                                      
அவன் வருத்தத்தைக் கண்ட தேவதை அவனுக்கு உதவ முன் வந்தது. இருந்தாலும் விறகு வெட்டியின் நேர்மையைப் பரிசோதிக்க எண்ணியது 
"அப்படியா?நான் உதவுகிறேன்!" என்ற தேவதை ஆற்றில் மூழ்கி "இதுவா எனப்பார்?" என ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்து தந்தது.விறகு வெட்டி இது என் கோடாரி அல்ல என மறுத்துவிட்டான்.



மீண்டும் தேவதை நீரில் மூழ்கி வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து தந்தது.விறகு வெட்டி "தேவதையே! இதுவும் எனது கோடரி அல்ல எனக் கூறி வாங்க மறுத்தான்.


மறுபடியும் ஆற்றில் மூழ்கிய தேவதை அவனுடைய உண்மையான இரும்புக் கோடரியைக் கொண்டு வந்து தந்தது.|அளவற்ற மகிழ்ச்சியடைந்த விறகு வெட்டி "ஆம்!இதுதான் என்னுடைய கோடரி!" என மகிழ்ந்து கூறினான்.




தனது வறுமையையும் பொருட்படுத்தாமல் 
விலையுயர்ந்த தங்கக்கோடாரிக்கும், வெள்ளிக் கோடாரிக்கும் ஆசைப்படாமல் நேர்மையாக இரும்புக்கோடாரிதான் என்னுடையது என்று விறகுவெட்டி கூறியதால் தேவதை அகமகிழ்ந்து  விறகுவெட்டியின் நேர்மைக்கு பரிசளிக்க எண்ணியது. இரும்புக் கோடாரியுடன், தங்கக்கோடாரியையும், வெள்ளிக்கோடாரியையும் சேர்த்து மூன்று கோடாரிகளையும் பரிசாக அளித்து "விறகு வெட்டியே! உனது நேர்மையைப் பாராட்டுகிறேன்..உனது நேர்மைக்குப் பரிசாக மூன்று கோடாரிகளையும் நீயே வைத்துக்கொள்.இதை வைத்து உனது வாழ்வை வளமாக்கிக்கொள்!" என்று கூறியது.

     இக்கட்டான சந்தர்ப்பத்திலும் நேர்மையைத் தவறவிடாத விறகு வெட்டி தேவதை பரிசளித்த கோடாரிகளினால் தனது வறுமை நீங்கி வாழ்வில் உயர்ந்தான்.

நீதி:
குழந்தைகளே! நீங்களும் இதுபோல் எப்போதும் நேர்மையை பெரிதாக எண்ணி இக்கட்டான சூழ்நிலைகளில் கூட |பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.நேர்மையுடன் செயல்பட்டால் இறைவன் எப்போதும் நம்மைக் கைவிடமாட்டார்.







புதன், 16 ஜூலை, 2025

வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

வேப்பம்பூவின் நன்மைகள் என்ன?

வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டது. வேப்பமரம் என்றாலே இலை,பட்டை, வேர்கள்,பூக்கள், கொட்டைகள், எண்ணெய் என எண்ணற்ற நன்மைகள் உடல் நலத்திற்காக உண்டு.செலவில்லாமல் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடியது.

தமிழ் நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும் , ஆந்திர மாநிலத்தில் யுகாதி அன்றும்  வேப்பம்பூ ரசம் அல்லது  வேப்பம்பூவுடன் வெல்லம், வாழைப்பழம் கலந்து பிரசாதமாக உண்ணத் தரப்படுகிறது.நமக்கு உடலில் ஏற்படும் வாத, பித்த,கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத்தாழ்வுகளை சமன் படுத்த  வேப்பம்பூ பயன்படுகிறது.வயிற்றுப்புழுக்கள்  வெளியேறவும்,எதிர்ப்புச் சக்தியை கூட்டவும் உதவி செய்கிறது

மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் பூக்கும் வேப்பம் பூக்களை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி வைத்துக்கொண்டால் வருடம் முழுதும்பயன்படுத்தலாம்.வேப்பம்பூவின் பயன்கள்  என்னென்ன எனப் பார்க்கலாம்.வேப்பம்பூவைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?அறு சுவைகளில் கசப்புச்சுவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை. மற்ற கசப்புப் பொருள்களை விட வேப்பம்பூவில் மிதமான கசப்புச்சுவை இருப்பதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வேப்பம்பூ சாதம்:

எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் தாளித்து 1ஸ்பூன் வேப்பம்பூவையும் சேர்த்து வதக்கி சாதம் கிளறி சாப்பாட்டுக்குமுன் 2,3 களம் சாப்பிடலாம்.

வேப்பம்பூ ரசம்:

தினமும் வைக்கும் தக்காளி ரசம், புளிசேர்த்து வைக்கும் ரசத்தில்  1 ஸ்பூன் வேப்பம்பூக்களை சேர்க்கலாம்.

வேப்பம்பூ சாதப்பொடி:

பருப்பு சாதப்பொடி தயார் செய்யும் போது உலர் வேப்பம்பூக்களை சேர்த்து அரைத்து வேப்பம்பூ சாதப்பொடி தயார் செய்யலாம்.சாதப்பொடியுடன் சேர்த்து சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

வேப்பம்பூ பச்சடி:

வாணலியில் சிறிது எண்ணய்விட்டு கடுகு தாளித்து வேப்பம்பூவை தக்கி தயிரில் சேர்த்தால் தயிர்ப்பச்சடி.

வேப்பம்பூ வற்றல்:

வேப்பம்பூவை உப்பு சேர்த்த மோரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் வேப்பம்பூ வற்றல் ஆகும். இதை வற்றல் குழம்பாக செய்யலாம்.

வேப்பம்பூ கஷாயம்:

நீரில் வேப்பம்பூக்களைப்போட்டுக் கொதிக்கவைத்தால் கஷாயம் .

என பலவிதங்களில் உணவில் சேர்த்து பலனடையலாம்.

வேப்பம்பூ பதப்படுத்துதல்:

உலர் வேப்பம்பூக்கள்:

வேப்பம்பூவை சேகரித்து நன்கு நீரில் அலசி நீரை வடித்துவிட்டு ஒரு பருத்தித் துணியில் பரப்பி நிழலில் மொறுமொறுவென்று உலர்த்த  வேண்டும். நன்கு உலர்ந்த பூக்களை கண்ணாடி கலனில் இறுக மூடி வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிறு வலி பிரச்சினைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேப்பம்பூ கஷாயம் சிறந்த பலனைத் தரும்.

ஒரு டம்ளர் நீரில் ஐந்து வேப்பம்பூக்களைப்போட்டு பாதியாகச் சுண்டவைத்து கஷாயம் தயாரிக்க வேண்டும்.

வேப்பம்பூ நான்கு அல்லது ஐந்தை சிறிதளவு  வெல்லம் சேர்த்து மென்று தின்றால் பித்தம் நீங்கும்.உடல் எடை குறையும்.

வேப்பம்பூவில் புரதம்,கார்போஹைட்ரேட்டுகள்,கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி , நார்ச்சத்து ஆகிய சத்துகள் இருப்பதால் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறது.வேப்பம்பூவில் வெப்பகுணம் இருப்பதால் அதிக கலோரிகளை எரித்து எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உண்டான ஹார்மோனை தடுக்க உதுவுவதால் தினமும் ஒரு ஒரு ஸ்பூன் புதிதாகப்பறித்த  வேப்பம்பூக்களை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.அழகான சருமம் பெறலாம்.

கசப்புத்தன்மையுடன் இருக்கும் வேம்பம்பூ  வெப்பத்தன்மையும் கொண்டது. மலக்குடலில் இருக்கும் பூச்சிகள் வெளியேற வேப்பம்பூ சிறப்பாகச் செயலாற்றும். இனிப்பு அதிகம் சாப்பிடும் குழந்தைகள் அதிகமாக வயிற்றுப்பூச்சி தொல்லைக்கு ஆளாகும் .ஐந்து வேப்பம்பூக்களை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பூச்சித்தொல்லை,வயிற்றுவலி நீங்கி நலம் பெறுவார்கள்.

வயிறு சுத்திகரிக்க பெரியவர்கள் மாதம் ஒருமுறை உலர் வேப்பம்பூக்களை பொடியாக்கி மேரில் கலந்து கொடுத்து வர  வேண்டும்.

உணவில் வேப்பம்பூக்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம்,சருமப்பிரச்சினைகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கும்.கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.வேப்பம்பூ ரத்தத்தை சுத்திகரிப்பதால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை நம் உடலிலிருந்து வெளியேற்றுகிறது.

வேப்பம்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைலி, காைதுவலி நீங்கும்.

தலைமுடி அடர்த்தியாக வளர வேப்பம்பூவை கைப்பிடி எடுத்து உச்சந்தலையில் பரபரவென தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கி தலைமுடி அடர்த்தியாக மாறும்.இளநரை மாறும்.வாரத்தில் ஒருமுறை சில வாரங்களுக்கு பின்பற்ற வேண்டும்.

குறிப்பு: உடல் உஷ்ணம் இருப்பவர்கள் வேப்பம்பூவை மிகக்குறைவாகப் பயன்படுத்தவும். கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.


வெள்ளி, 11 ஜூலை, 2025

எறும்புகளும் வெட்டுக்கிளியும்(உழைப்பின் அருமை)

 எறும்புகளும் வெட்டுக்கிளியும்

(சிறுவர் நன்னெறிக் கதைகள்)

குழந்தைகளுக்கான இக்கதை வாழ்க்கையில் உழைப்பும், திட்டமிடுதலும், சேமிப்பும் அவசியம் என வலியுறுத்துகிறது. இளம் வயதிலேயே குழந்தைகள் இதுபோல் நன்னெறிக் கதைகளைக் கேட்டு வளருவதால் நல்ல ஒழுக்கமான பண்புகள் மனதில் பதிவதோடு பெரியவர்களானதும் இவ்வாறே இருக்கவேண்டும் என எண்ணுவர். அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி நல்ல மனிதர்களாக உருவாக்கும்.



ஒரு அடர்ந்த காட்டின் அழகான புல்வெளியில் வெட்டுக்கிளியும் 
எறும்புகளும் வசித்து வந்தன.



எறும்புகள் எந்நேரமும் உழைத்துக்கொண்டேயிருந்தன தானியங்களை குளிர், மழைக் காலத் தேவைக்காக சேமித்துக்கொண்டிருந்தன.




வெட்டுக்கிளி எறும்புகளை அழைத்து "நீங்கள் ஏன் எந்நேரமும்உழைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்?எதிர்காலத்தை நினைத்து வருத்தப்படக்கூடாது.நிகழ்காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். என்னைப்போல்இசைத்துக்கொண்டும் பாடிக்கொண்டும் உல்லாசமாய் இருக்கவேண்டியதுதானே?"என்று கிண்டல் செய்தது. அதற்கு எறும்புகள் "இப்போது உணவு சேகரித்தால்தான் குளிர்,மழைக் காலத்தில் பட்டினி கிடக்காமல் சாப்பிட முடியும்" என்றன.




காலம் மாறியது வெயில் காலம் சென்று மழைக்காலமும் வந்தது. எறும்புகள் அதன் இருப்பிடங்களில் ஓய்வெடுத்தன. தாங்கள் வெயில்காலத்தில் சேகரித்த உணவுகளை உண்டு மகிழ்ந்திருந்தன.ஆனால் வெட்டுக்கிளியோ தங்க இடமில்லாமல் மழையில் நனைந்தபடி உண்ண உணவில்லாமல் மிகுந்த சிரமப்பட்டது.


பசியோடிருந்த வெட்டுக்கிளி கடைசியாக எறும்புகளிடம் சென்று உணவு கேட்டது.அப்போது எறும்புகள் கேட்டன."நீதான் வருங்காலத்தை நினைத்து எப்போதும் கவலைப்படமாட்டேன் எனக் கூறினாயே?இப்போது உணர்கிறாயா?வெயில் காலத்தில் உழைத்து உணவும் இருப்பிடமும் சேகரித்து வைத்திருந்தால் இப்போது கஷ்டப்பட வேண்டாம் என்று!"     நிறைய தானியங்களைச் சேர்த்து வைத்திருந்த எறும்புகளும் வெட்டுக்கிளிக்கு மறுக்காமல் உணவளித்தன.




எறும்புகளிடம் மன்னிப்பு கேட்டு வருந்திய வெட்டுக்கிளி...கடின உழைப்பும், சேமிக்கும் பழக்கமும், சரியான திட்டமிடுதலும்  நம் எதிர்காலத்துக்குத் துணையாயிக்கும் என புரிந்து கொண்டேன். நேரத்தை வீணாக்காமல் நானும் இனிமேல் உழைத்து சேமிப்பேன் என உறுதி பூண்டது.

நீதி: இக்கதை நமக்கு கடின உழைப்பின் மேன்மையையும், திட்டமிடுதலையும், சேமிப்பையும் கற்றுத்தருகிறது.




முதலையும் குரங்கும்

kids moral stories

 முதலையும் குரங்கும்: சிறுவர் நன்னெறிக் கதைகள்

சிறுவர் பண்புக் கதைகள்

ஒரு அழகிய காட்டில் ஆற்றங்கரையில் ஒரு நாவல் மரம் இருந்தது. அந்த நாவல் மரத்தில் ஒரு குரங்கு வசித்து வந்தது.அது தினமும் நாவல் பழங்களை ருசித்துச் சாப்பிடுவதை ஆற்றில் வாழ்ந்த முதலை தினமும் பார்த்துக்கொண்டிருந்தது.குரங்கும் முதலையும் நண்பர்களாயினர்.




குரங்கு தினமும் முதலைக்கும் நாவல் பழங்களை உண்ணக் கொடுத்தது. நண்பர்கள் இருவரும் நாவல் பழங்களை தினமும் ருசித்து மகிழ்ந்தனர்.




நாவல் பழங்களை தினமும் சாப்பிட்ட முதலை தனது மனைவிக்கும் நாவல் பழத்தைக் கொண்டுபோய் தர ஆசை கொண்டது. குரங்கிடம் கேட்டு தனது மனைவிக்கும் நாவல் பழங்களை ருசிக்கக் கொடுத்தது.


நாவல் பழங்களைச்சாப்பிட்ட பெண் முதலை "இவ்வளவு ருசியாயிருக்கும் நாவல் பழங்களைச் சாப்பிடும் குரங்கை சாப்பிட்டால் எவ்வளவு ருசியாயிருக்கும் என எண்ணியது. தனது ஆண் முதலையிடம் "உடனே அந்தக் குரங்கைக் கொண்டு வா.நான் அதை ருசிக்க வேண்டும் "எனக் கூறியது.ஆண் முதலை நண்பனை எப்படி கொல்வது என எவ்வளவோ மறுத்துப்பார்த்தது.பெண் முதலை எனக்கு உடல் பலஹீனமாயிருக்கிறது.குரங்கின் இதயத்தைச் சாப்பிட்டால்தான்சரியாகும் என நாடகமாடியது.ஆண் முதலை"சரி குரங்கை அழைத்து வருகிறேன்" எனக் கூறிச் சென்றது.



குரங்கிடம் திரும்பி வந்த முதலை "ருசியான நாவல் பழங்களைக் கொடுத்த உனக்கு என் மனைவி விருந்து கொடுக்க அழைக்கிறாள்"எனக்கூறி முதுகில் ஏற்றி அழைத்துச் சென்றது.


அவர்கள் இருவரும் ஆற்றின்பாதி தூரத்தைக் கடந்தபிறகு..முதலை பேசத் தொடங்கியது."எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..ஆனால் என் மனைவி மிகவும் சுகவீனமாக இருக்கிறாள்,தன்னைக் குணப்படுத்துவதற்கு ஒரு குரங்கின் இதயம்தான் மருந்து என அவள் உறுதியாக நினைக்கிறாள்.உனைக் கொன்று தின்பதைத்தவிர வேறு வழியே இல்லை.இனி உன்னோடு பேசி மகிழ முடியாது"என வருத்தத்துடன் கூறியது.



ஆனால் அந்த குரங்கு விரைவாக சிந்தித்து பேசத் தொடங்கியது, 'நண்பா, உன் மனைவியின் சுகவீனத்தை அறிந்து எனக்கும் கவலையாகத்தான் இருக்கிறது. அவளுக்கு உதவி செய்ய எனக்கும் ஆசை தான், ஆனால் என் இதயத்தை மறந்து போய் அந்த நாவல் மரத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன். நாம் திரும்பவும் அந்த மரத்திற்குச் சென்று இதயத்தை எடுத்து வந்து விடலாமா?'.
முதலையும் குரங்கின் வார்த்தையை நம்பி விட்டது. நீந்தும் திசையை மாற்றி மறுபடியும் அந்த நாவல் மரத்தை நோக்கிச் சென்றது. சட்டென்று குரங்கு தாவிச் சென்று மரத்தின் உச்சிக்கு சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு விட்டது.
குரங்கு பேசத் தொடங்கியது, "முட்டாள் முதலையே இதயத்தை உடலில் இருந்து எடுத்து காயப்போடமுடியாது என உனக்குத் தெரியாதா? உன்னை இனி நான் ஒருபொழுதும் நம்ப மாட்டேன், இந்த மரத்தில் இருந்து பழங்களையும் பறித்துத் தர மாட்டேன். இனி நீ என் நண்பனில்லை.என் முகத்தில் விழிக்காதே!" எனக்கூறி மரத்தில் ஏறிச் சென்று விட்டது.

முதலை தான் முட்டாளாக மாறியதை உணர்ந்தது.ஒரு நல்ல நண்பனையும் இனிய,சுவையான நாவல் பழங்கள் கிடைப்பதையும் இழந்துவிட்டேனே என வருந்தியது.அந்தக் குரங்கு சாதுர்யமாகவும் துரிதமாகவும் சிந்தித்த காரணத்தால்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.



நீதி: அறிவும் சமயோசித புத்தியும் நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.