சிறுவர்களுக்கு நல்லகதைகள் சொல்லி அவர்களை நற்குணம் மிக்கவராக உருவாக்க மரபுகளாகத் தொடரும் கதைகள்தான் சிறுவர் நீதி நெறிக் கதைகள்: சிறுவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக அவர்கள் மகிழும்படியும் ,பண்புகளைக் கற்றுக்கொள்ளும்படியும் ஏராளமான விலங்குகள், தேவதைக் கதைகள் உள்ளன.அவற்றில்
ஒன்றுதான் விறகுவெட்டியும் தேவதையும். நேர்மையாக இருப்பதன் விளைவு என்ன என குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ள இந்தக் கதை உணர்த்தும்.
விறகு வெட்டியும் தேவதையும்
ஒரு கிராமத்தில் நேர்மையான ஒரு விறகு வெட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.அவன் தன் தினசரி பிழைப்புக்கு பக்கத்து காட்டிற்கு சென்று விறகு வெட்டி விற்று வாழ்ந்தான்.எப்போதும்போல் ஒருநாள் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டிருந்தான்.
அவனுடைய இரும்புக் கோடாரி கைநழுவி ஆற்றில் விழுந்து மூழ்கியது.அதிர்ச்சியடைந்த விறகு வெட்டி "ஐயோ கடவுளே!இந்தக் கோடாலிதான் எனது குடும்பம் பசியில்லாமல் வாழ உறுதுணையாக இருந்தது"."இனி கோடாரி இல்லாமல் என்ன செய்வேன்?" என மிகவும் வருந்தினான்.
அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி"ஏன் அழுகிறாய் விறகுவெட்டியே?"எனக் கேட்டது.அப்போது விறகு வெட்டி "எனது கோடரி கை நழுவி ஆற்றில் விழுந்து விட்டது இனி பிழைப்புக்கு என்ன செய்வேன்!"என வருந்தினான்.
அவன் வருத்தத்தைக் கண்ட தேவதை அவனுக்கு உதவ முன் வந்தது. இருந்தாலும் விறகு வெட்டியின் நேர்மையைப் பரிசோதிக்க எண்ணியது
"அப்படியா?நான் உதவுகிறேன்!" என்ற தேவதை ஆற்றில் மூழ்கி "இதுவா எனப்பார்?" என ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்து தந்தது.விறகு வெட்டி இது என் கோடாரி அல்ல என மறுத்துவிட்டான்.
மீண்டும் தேவதை நீரில் மூழ்கி வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து தந்தது.விறகு வெட்டி "தேவதையே! இதுவும் எனது கோடரி அல்ல எனக் கூறி வாங்க மறுத்தான்.
மறுபடியும் ஆற்றில் மூழ்கிய தேவதை அவனுடைய உண்மையான இரும்புக் கோடரியைக் கொண்டு வந்து தந்தது.|அளவற்ற மகிழ்ச்சியடைந்த விறகு வெட்டி "ஆம்!இதுதான் என்னுடைய கோடரி!" என மகிழ்ந்து கூறினான்.
தனது வறுமையையும் பொருட்படுத்தாமல்
விலையுயர்ந்த தங்கக்கோடாரிக்கும், வெள்ளிக் கோடாரிக்கும் ஆசைப்படாமல் நேர்மையாக இரும்புக்கோடாரிதான் என்னுடையது என்று விறகுவெட்டி கூறியதால் தேவதை அகமகிழ்ந்து விறகுவெட்டியின் நேர்மைக்கு பரிசளிக்க எண்ணியது. இரும்புக் கோடாரியுடன், தங்கக்கோடாரியையும், வெள்ளிக்கோடாரியையும் சேர்த்து மூன்று கோடாரிகளையும் பரிசாக அளித்து "விறகு வெட்டியே! உனது நேர்மையைப் பாராட்டுகிறேன்..உனது நேர்மைக்குப் பரிசாக மூன்று கோடாரிகளையும் நீயே வைத்துக்கொள்.இதை வைத்து உனது வாழ்வை வளமாக்கிக்கொள்!" என்று கூறியது.
இக்கட்டான சந்தர்ப்பத்திலும் நேர்மையைத் தவறவிடாத விறகு வெட்டி தேவதை பரிசளித்த கோடாரிகளினால் தனது வறுமை நீங்கி வாழ்வில் உயர்ந்தான்.
நீதி:
குழந்தைகளே! நீங்களும் இதுபோல் எப்போதும் நேர்மையை பெரிதாக எண்ணி இக்கட்டான சூழ்நிலைகளில் கூட |பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.நேர்மையுடன் செயல்பட்டால் இறைவன் எப்போதும் நம்மைக் கைவிடமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக